கோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மறைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முகமட் அடிப் குடும்ப வழக்கறிஞர் ஹானிப் காத்ரி தெரிவித்தார்.
அத்தீயணைப்பு வீரரின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிப்பதற்கான விசாரணையில், அடிப் தாக்கப்பட்டதால் இறந்திருக்க மாட்டார் என்று டோமி கூறியது தொடர்பாக, இந்த மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்று அவர் கூறினார்.
இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தோமஸை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஹானிப் தெரிவித்தார்.
“முக்கியமானது என்னவென்றால், அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக நாங்கள் நம்புகிறோம். அதேபோல் நீதிமன்றம் கண்டறிந்தால், டோமி மன்னிப்புக் கேட்க வேண்டும். நீதிமன்றத்திடமும், அடிப்பின் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற ஒரு காரியம் இனி ஒரு போதும் நடக்காது என்று அவர் உறுதியளிக்க வேண்டும்” என்று ஹானிப் செய்தியாளர்களிடம் கூறினார்.