கோலாலம்பூர்: இங்குள்ள இந்துக்களின் விசுவாசத்திற்கு சவால் விடுத்திருக்கும் வகையில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பிய விவகாரம் குறித்து, இந்திய மக்களை அமைதி காக்கும்படி தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
“அண்மையில் கிளந்தான் சுற்றுப்பயணத்தின் போது ஜாகிர் நாயக்கின் பல உரைகள் காரணமாக முஸ்லிம் அல்லாத சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களாக உணர்ச்சிகரமான உணர்வுகள் இருந்தன. அவர் மீண்டும் மற்ற மதங்களையும், அவர்களின் நம்பிக்கைகளையும் குறித்து பேசுவதாகத் தெரிகிறது. பெரும்பாலான மலேசியர்கள் தங்கள் இனம் மற்றும் மதத்தை பாதுகாப்பதாக நான் கருதுகிறேன். இது நமது நாட்டின் பல இன மற்றும் மத சமூக உணர்வுகளை அழிக்கக்கூடிய எல்லைகளை கடப்பதன் மூலம் சங்கடத்தை உருவாக்கிவிடும்” என்று வேதமூர்த்தி கூறினார்.
ஜாகிரின் கருத்துகளால் மோதலைத் தூண்டுவதற்கான சாத்தியத்தை அமைச்சர் ஒப்புக் கொண்டார். ஆயினும், அக்கருத்துக்களால் மலேசியர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
“பல அரசு சாரா நிறுவனங்கள் பொது உறுப்பினர்களுடன் சேர்ந்து ஜாகீருக்கு எதிராக பல்வேறு காவல் துறை புகார்களைப் பதிவு செய்துள்ளன என்பது எனக்கு புரிகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய மலேசியர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், காவல் துறை தங்கள் விசாரணையை நியாயமான முறையில் நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார்.