கோலாலம்பூர்: அனைத்து பள்ளிகளிலும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான அரேபிய வனப்பெழுத்து பாட அறிமுகம் தொடரப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இருப்பினும், ஒவ்வொரு பள்ளிகளின், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே அப்பாடம் செயல்படுத்தப்படும் என்று ஓர் அறிக்கையின் வாயிலாக அது தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் சார்ந்த பிற முடிவுகளான, அதாவது பாடப்புத்தகத்தில் மூன்று பக்கங்களில் அரேபிய வனப்பெழுத்து இடம்பெறுவது, மேலும் தேர்வில் மதிப்பீடு செய்யப்படாது போன்ற அம்சங்கள் நிலை நிறுத்தப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி, அரேபிய வனப்பெழுத்து அறிமுகத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், அது ஆசிரியர்களின் கட்டுப்பாட்டினில் விடப்படுவதாகவும், அது சம்பந்தமான பக்கங்கள் ஆறு பக்கங்களிலிருந்து மூன்று பக்கத்திற்கு குறைக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சீன பள்ளி வாரிய அறங்காவலர் கூட்டமைப்பான டோங் சோங் உட்பட சிலர் இதை ஆட்சேபித்தனர். இதனை இரத்து செய்ய வேண்டும் என்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.