கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய போதகர் ஜாகிர் நாயக், காமுடா பெர்ஹாட் நிறுவனர் கூன் யூ யின் மற்றும் சீன பள்ளி வாரிய அறங்காவலர் கூட்டமைப்பு டோங் சோங் ஆகியோரை காவல் துறை விசாரிக்கும் என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டின் பல இன மக்களின் உணர்திறன் பொருட்படுத்தாமல், பல்வேறு தரப்பினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும், இனவெறி அறிக்கைகளை வெளியிடுவதாகவும் மொகிதின் குறிப்பிட்டார்.
“இந்த விவகாரத்தில் காவல் துறை தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், டோங் சோங், கூன் யூ யின் மற்றும் ஜாகிர் நாயக் ஆகியோரை விசாரிக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் பலர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மொகிதின் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுப்பது உட்பட, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.