Home One Line P2 பிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்

1054
0
SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் இல்லத்தின் விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

வழக்கமாக, சனிக்கிழமைகளில் கமல்ஹாசன்தான் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றி விட்டு பின்னர் வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் என்று கூறுவார்.

ஆனால் இந்த முறை நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தனது குரல் வழி நிகழ்ச்சியைத் தொடக்கிய பிக் பாஸ், இல்ல பங்கேற்பாளர்களுடன் ஏற்பட்ட சர்ச்சையில் மதுமிதா தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதால், விதிமுறைகளை மீறியதற்காக பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னரே கமல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தினார். மேடைக்கு மதுமிதாவை அழைத்து கமல்ஹாசன் உரையாடினார். அப்போது மேடைக்கு வந்த மதுமிதா கையில் மணிக்கட்டு பகுதியில் காயத்திற்கான கட்டுடன் காணப்பட்டார்.

எனினும் வெள்ளிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த காட்சிகள் காட்டப்படவில்லை.

இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்திலிருந்து ஐந்து பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அபிராமி, கவின், முகேன், லோஸ்லியா, மதுமிதா ஆகியோரே  அந்த ஐவராவார்.

நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றிய கமல், மதுமிதா வெளியேற்றப்பட்டு விட்டாலும், இந்த வாரம் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட மற்றவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டதாக பொருட்படாது என்றும் கண்டிப்பாக வெளியேற்றுப் படலம் இந்த வாரமும் உண்டு என அறிவித்தார்.

எனினும், யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை கமல் அறிவிக்கவில்லை. வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் யார் வெளியேற்றப்படுவார் என்பது நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும் என அறிவித்து விட்டு கமல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

-செல்லியல் தொகுப்பு