ஹாங்காங் – தொடர்ந்து நீடித்து வரும் ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங்கின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு மக்கள் தைவான் போன்ற நாடுகளுக்கு நிரந்தரமாகக் குடியேறும் போக்கு அதிகரித்து வருகிறது.
தைவான் மட்டுமின்றி மற்ற சில நாடுகளுக்கும் நிரந்தரக் குடியுரிமை பெற்று குடியேற ஹாங்காங் மக்கள் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று 1997-ஆம் ஆண்டு வாக்கில் ஹாங்காங் மீண்டும் சீனா வசம், பிரிட்டனால் ஒப்படைக்கப்பட்ட காலகட்டத்தில் எழுந்த நிலைத்தன்மையற்ற சூழலினால் ஹாங்காங் மக்கள் பலர் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் குடியேறத் தொடங்கினர்.
ஆனால், பிரிட்டன் சீனாவிடம் ஹாங்காங் தீவை ஒப்படைத்தபோது, அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங் ஜனநாயக அமைப்போடும், சீனாவின் தலையீடு இல்லாமலும் செயல்படும் என்ற உறுதிமொழியை சீன அரசாங்கம் வழங்கியது.
அதன்பின்னர் நிலைமை சீராகியது. ஹாங்காங்கிலேயே மக்கள் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர். எனினும் அந்த காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் சிங்கையில் குடியேறினர்.