கோலாலம்பூர்: அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததாக ஜாகிர் நாயக் முஸ்லிம் அல்லாதவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகக் கூறியிருந்தார்.
ஆயினும், அவர் மன்னிப்புக் கேட்கும் இடத்தில், நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் இனி அவர் தொட மாட்டர் என்றுக் கூறவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது மன்னிப்பு நாட்டிலிருந்து நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிக்க அல்லது இங்கே குற்றவியல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே வெளியிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் தனது உரையினை தவறாக புரிந்து கொண்டு அதனால் எழுந்த குழப்பத்திற்காக மன்னிப்புக் கேட்டார். அவர் இந்துக்களின் விசுவாசத்தை கேள்விக்குட்படுத்தியதையும், அவர் வெளியேறுவதற்கு முன்பு, சீனார்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதைக் குறித்து ஒப்புக் கொள்ளவில்லை. நாட்டின் குடிமக்களான இந்துக்களையும், சீனர்களையும் காயப்படுத்திய மற்றும் கோபப்படுத்திய அவரது பேச்சுக்கு அவர் உண்மையில் மன்னிப்பு கேட்கவில்லை” என்று இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.