சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு இன்று புதன்கிழமை விசாரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது தரப்பில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் (இந்திய நேரப்படி) விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சித்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார்.
இந்த வாதத்தை முழுமையாக கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என்று உத்தரவிட்டார்.
அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தனர். ஆயினும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அக்குறிப்பிட்ட நேரத்தில் அயோத்தி வழக்கில் விசாரணை நடத்தி வந்தததால், ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. எனவே எந்நேரமும் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் எனும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் இந்த மனு விசாரணைக்கு கொண்டுசெல்லப்படும் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ரமணாவிடம் மீண்டும் ப.சிதம்பரத்தின் தரப்பினர் முறையிட்டனர். நான்கு மணிக்கு தலைமை நீதிபதி அமர்வு முடியும் எனவும், அதற்குள் நீதிமன்றம் நேரம் முடிந்துவிடும் எனவும் அவரது தரப்பினர் கூறினர்.