புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) தலைமறைவாகிவிட்டார் என்றும், தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்று புதன்கிழமை இரவு இந்திய நேரம் 8.30 மணி வாக்கில் காங்கிரஸ் தலைமையகத்தில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தோன்றி, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வாசித்தார்.
நேற்று இரவு முழுவதும் தனது வழக்கறிஞர்களுடன் அமர்ந்து தனது முன் ஜாமீன் வழக்குக்கான ஆவணங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்ததாகவும், இன்று காலையில்தான் அந்தப் பணிகள் முடிவடைந்ததாகவும் சிதம்பரம் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
தான் ஓடி ஒளியவில்லை என்றும் சட்டத்தின் பாதுகாப்பைத் தேடித்தான் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.
தனக்கெதிராக எந்தவிதக் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூட (எப்ஐஆர்) தனது பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றும் கூறிய சிதம்பரம், இதுவரையிலும் நீதிமன்ற உத்தரவின்படி முன்ஜாமீனைத் தான் பெற்று வந்திருப்பதாகவும், தெரிவித்ததோடு, இன்று நாள் முழுவதும் தனது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் விவரித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதிவரை சிபிஐ மற்றும் அமுலாக்க அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பேன் என்றும் சிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்டார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களும், அவருடைய வழக்கறிஞர்களான கபில் சிபில் போன்றவர்களும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பிற்குப் பின்னர் எந்தவிதக் கேள்விகளுக்கும் தான் பதிலளிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டு, சிதம்பரம் உடனடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து விடைபெற்று புறப்பட்டுச் சென்றார்.
அவர் மீண்டும் தனது புதுடில்லி இல்லத்திற்கு திரும்பினார் என ஊடகங்கள் தெரிவித்தன.