புதுடில்லி – (இந்திய நேரம் இரவு 10.00 நிலவரம் – கூடுதல் தகவல்களுடன்) முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கார் ஒன்றில் ஏற்றப்பட்டு சிபிஐ தலைமையகம் கொண்டு செல்லப்பட்டார்.
சிதம்பரம் வீட்டின் முன் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த பரபரப்பு நாடகம் சிதம்பரம் கைதைத் தொடர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
திடீரென நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு தனது புதுடில்லி இல்லம் திரும்பிய சிதம்பரத்தைப் பின் தொடர்ந்த சிபிஐ மற்றும் அமுலாக்க அதிகாரிகள் அவரது இல்லத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
எனினும், அவரது இல்லத்தின் வாசல் கதவுகள் திறக்கப்படாததால் சுவரேறிக் குதித்த சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் குழுமினர்.
பின்னர் சிதம்பரத்துடன் சிபிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், புதுடில்லி காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு சிதம்பரத்தின் இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. உடனடியாக, சிபிஐ இலாகாவுக்குச் சொந்தமான கார் ஒன்று வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டது.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் சிதம்பரம் வீட்டிற்குள் வெளியே கொண்டு வரப்பட்டு காரில் ஏற்றப்பட்டார்.
தற்போது அவர் புதுடில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.