கோலாலம்பூர்: நாட்டின் நிரந்தர குடியுரிமை பெற்ற இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவு சட்ட மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிகேஆர் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.
நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் அனைத்து இனங்களின் உணர்வினையும் மதிக்கும் அதே வேளையில் அனைத்து தரப்பினரும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அது குறிப்பிட்டிருந்தது.
“இராணுவத்தை அவமதிப்பது போன்ற அறிக்கைகள் மீண்டும் செய்யப்படக்கூடாது” என்றும் பிகேஆர் அரசியல் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 2012-இல் தேசிய முன்னணி அரசாங்கத்திடமிருந்து நிரந்தர குடியுரிமை அந்தஸ்தைப் பெற்ற ஜாகிர், மலேசிய சீனர்களையும், இந்தியர்களையும் குறி வைத்து வெளியிட்ட கருத்து பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. புத்ராஜெயாவை அவரை மீண்டும் இந்தியாவிற்கே அனுப்பக் கோரி பல்வேறு தலைவர்களும், அமைப்புகளும் வற்புறுத்தினர்.
சர்ச்சைக்குரிய மத போதகர் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், டாக்டர் ஜாகிரின் நிரந்தர குடியுரிமை அந்தஸ்த்தை அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.