புது டில்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு புதன்கிழமை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கார் ஒன்றில் ஏற்றப்பட்டு சிபிஐ தலைமையகம் கொண்டு செல்லப்பட்டார்.
புது டில்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்றிரவு முழுதும் அவர் சிபிஐ தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அதனையடுத்து, இன்று வியாழக்கிழமை காலை அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று நம்பப்படுகிறது.
நேற்று, திடீரென நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு தனது புதுடில்லி இல்லம் திரும்பிய சிதம்பரத்தைப் பின் தொடர்ந்த சிபிஐ மற்றும் அமுலாக்க அதிகாரிகள் அவரது இல்லத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
எனினும், அவரது இல்லத்தின் வாசல் கதவுகள் திறக்கப்படாததால் சுவரேறிக் குதித்த சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் குழுமினர்.
பின்னர் சிதம்பரத்துடன் சிபிஐ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், புதுடில்லி காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு சிதம்பரத்தின் இல்லம் சுற்றி வளைக்கப்பட்டது. உடனடியாக, சிபிஐ இலாகாவுக்குச் சொந்தமான கார் ஒன்று வீட்டிற்குள் கொண்டு வரப்பட்டு தயாராக வைக்கப்பட்டது.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பின்னர் சிதம்பரம் வீட்டிற்குள் வெளியே கொண்டு வரப்பட்டு காரில் ஏற்றப்பட்டார்.