கோலாலம்பூர்: மலேசிய இந்தியர்களிடையே புகழ் பெற்ற அரசு சாரா கல்வி நிறுவனம் ஒன்று 66.8 மில்லியன் ரிங்கிட் நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2008 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலும் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக அக்கல்வி நிறுவனம் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்கல்வி நிறுவனங்களின் இரண்டு கல்வி இயக்குநர்களும் விசாரணையில் உள்ளதாக எம்ஏசிசி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
“ஜூலை 8-ஆம் தேதி எங்களுக்கு அறிக்கை ஒன்று கிடைத்தது. இந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
இந்த கல்வி நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட், நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் கூறியது.
மேலும், அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மற்றும் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் உள்ளிட்ட சில மூத்த அரசாங்க அதிகாரிகளுக்கும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கல்வி நிறுவனத்தின் இரு இயக்குநர்களும் தொழிலைத் தொடங்குவது உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.