புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 9.15 நிலவரம்) நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) புதுடில்லி நீதிமன்றம் சற்று முன் அனுமதி வழங்கியது.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் புதுடில்லி நீதிமன்றத்திற்கு சிதம்பரம் கொண்டு வரப்பட்டார்.
அவரை 5 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகிய இருவரும் அவருக்கு தடுப்புக் காவல் வழங்கக் கூடாது என வாதாடினர். சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் இருவரும் இந்தியாவின் சிறந்த, மூத்த வழக்கறிஞர்கள் என்பதோடு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி விரைவில் தனது தீர்ப்பை வழங்கப் போவதாகக் கூறி நீதிமன்ற விசாரணையை ஒத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து சற்று முன் தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை 5 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்கினார்.
இதற்கிடையில் நாளை வெள்ளிக்கிழமை சிதம்பரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த முன் ஜாமீன் மீதான வழக்கு விசாரணைக்கு வருகின்றது.