ஈப்போ – தனது இந்தோனிசிய பணிப் பெண்ணிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாகப் புகார் சுமத்தப்பட்டிருக்கும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு 100,000 ரிங்கிட் பணம் தரப்பட்டதாக பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் (சபாநாயகர்) ஙே கூ ஹாம் (படம்) காவல் துறையில் புகார் செய்திருக்கிறார்.
பாலியல் வல்லறவு தொடர்பாக அந்தப் பெண்ணைப் புகார் செய்ய அழைத்து வந்தவரே அந்த நபர்தான் என்று கூறிய கூ ஹாம், அந்த நபரை நேருக்கு நேர் சந்தித்ததாகவும் கூறினார். தனக்கு 100,000 ரிங்கிட் தரப்பட்டதாகவும், அதே வேளையில் யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லக் கூடாது என தான் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டதாகவும் அந்நபர் தன்னிடம் தெரிவித்ததாக கூ ஹாம் மேலும் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் துரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பவுல் யோங் மீது ஒரு சதிவலை பின்னப்பட்டிருப்பது தெரிகிறது என்றும் தெரிவித்திருக்கும் கூ ஹாம் காவல் துறை இதனைத் தீவிரமா விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
இதற்கிடையில், குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் விடுமுறையில் செல்ல வேண்டும் என பேராக் மந்திரி பெசார் அகமட் பைசார் அசுமு கேட்டுக் கொண்டுள்ளார்.