பிரான்ஸ்: அமேசான் மழைக்காட்டில் உருவான காட்டுத் தீயை அணைப்பதற்கு ஜி7 நாடுகள் 22 மில்லியன் அமெரிக்க டாலரை உதவி நிதியாக வழங்கவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், காட்டுத்தீயை அணைப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிக்கு தேவையான ஒப்பந்தம் உருவாவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.
அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் போல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காடு அழிப்பை ஊக்குவிக்கின்றன. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்களை வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இதற்கிடையில், அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என்று பிரேசில் தெரிவித்து, ஜி7 வெளியிட்ட உதவி நிதியையும் நிராகரித்துள்ளது.