Home One Line P2 மேக்கன்சி ஸ்கோட் : உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி – யார் தெரியுமா?

மேக்கன்சி ஸ்கோட் : உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி – யார் தெரியுமா?

648
0
SHARE
Ad

நியூயார்க் : உலகின் பணக்காரர்களைப் பட்டியலிடும் புளூம்பெர்க் வணிக ஊடகம் மேக்கன்சி ஸ்கோட் என்பவரை உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாகப் பட்டியலிட்டிருக்கிறது.

இந்த மேக்கன்சி யார் தெரியுமா?

உலகின் முதலாவது பெரிய பணக்காரரான ஜெப் பெசோசின் முன்னாள் மனைவிதான் இவர்!

#TamilSchoolmychoice

பொதுவாக கணவன் – மனைவி விவாகரத்து பெற்று பிரிந்தால் அவர்களின் சொத்துகளும் பாகப்பிரிவினை செய்யப்படும். அதனால் இருவரின் தனித் தனி சொத்துகளின் மதிப்பும் குறையும்.

ஆனால் ஜெப் பெசோஸ் – மேக்கன்சி ஸ்கோட் விவகாரத்தில் நேர்மாறாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

விவாகரத்துக்குப் பின்னர் ஜெப் பெசோஸ் உலகின் மிகப் பெரிய பணக்காரராகவும் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மேக்கன்சி உலகின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாகவும் மகுடம் சூட்டப்படும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மேக்கன்சி ஸ்கோட் சொத்து மதிப்பு என்ன?

மேக்கன்சி ஸ்கோட்டின் சொத்து மதிப்பு 68 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்படுகிறது.

அறப்பணிகளுக்கு தாராளமாக வாரி வழங்குபவர் அவர். நூலாசிரியர். அதைவிட முக்கியமாக ஜெப் பெசோசைக் காதலித்து மணந்து பின்னர் விவாகரத்து பெற்றவர். அதுதான் அவரை இந்தப் பணக்கார நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

அமேசோன் பங்குகள் இந்த ஆண்டு தொடங்கி 90 விழுக்காடு உயர்ந்திருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் 28 விழுக்காடு உயர்ந்தன.

இதன் காரணமாக ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

பல பில்லியன் டாலர் மதிப்புடைய விவாகரத்து

தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜனவரி 2019-இல்  ஜெப் பெசோஸ் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஜெப் பெசோசும் அவரது மனைவி மேக்கன்சியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தங்களின் விவாகரத்தைத் தொடர்ந்து அமேசோன் பங்குகளைப் பிரித்துக் கொள்வதிலும் இணக்கத்தைக் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜெப் பெசோஸ் தனது மனைவியுடன் கண்டுள்ள உடன்பாட்டின்படி அமேசோனில் அவர் கொண்டிருக்கும் மொத்தப் பங்குகளுக்கும் ஏகபோக ஓட்டுரிமையை அவரே கொண்டிருப்பார். அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ் அந்தப் பங்குகளில் 25 விழுக்காட்டுக்கு உரிமையாளராக இருப்பார். இந்த ஏற்பாட்டின் மூலம், அமேசோன் தொடர்ந்து ஜெப் பெசோசின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

அவர்களின் 25 வருட திருமண வாழ்க்கை ஜூலை 2019 உடன் முடிவுக்கு வந்தது.

விவாகரத்து உடன்பாட்டின் மூலம் மேக்கன்சி அமேசோனின் பங்குகளில் 4 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறார். அதாவது சுமார் 19.7 மில்லியன் பங்குகள். விவாகரத்து பெற்ற சமயத்தில் இதன் மதிப்பு சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

உலகிலேயே மிகப் பெரிய இணையவழி விற்பனையாளராக அமேசோன் திகழ்கிறது. இன்றைக்கு அதன் பங்குகளின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விட்டது.

இதன் காரணமாக உலகின் முதல் பணக்காரப் பெண்மணியாகவும், உலக வரிசையில் 12-வது மிகப் பெரிய பணக்காரராகவும் இன்றைக்கு மேக்கன்சி திகழ்கிறார்.

மேக்கன்சி கடந்த 2019 மே மாதத்தில் விடுத்த அறிவிப்பில், காலப் போக்கில் தனது சொத்தில் பாதியை அறப் பணிகளுக்காக வழங்குவேன் எனக் கூறியிருந்தார். வாரன் பஃபெட் மற்றும் பில் கேட்ஸ் போன்ற உலகப் பணக்காரர்கள் தொடங்கியிருக்கும் “சொத்துகளை நன்கொடை வழங்க உறுதியளிப்போம்” என்ற இயக்கத்தில் தானும் இணைவதாகவும் மேக்கன்சி அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த இயக்கத்தில் மேக்கன்சி கையெழுத்திட்டிருப்பதைப்போல் அவரது கணவர் ஜெப் பெசோஸ் இன்னும் கையெழுத்திடவில்லை.

1.7 பில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய மேக்கன்சி

கடந்த ஜூலை மாதத்தில் தான் 1.7 பில்லியன் டாலர்களை 116 அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பதாக மேக்கன்சி அறிவித்திருந்தார்.

பாரம்பரியமாக கறுப்பினத்தவர்களுக்காக இயங்கிவரும் 4 பல்கலைக் கழகங்களும் இதில் அடங்கும்.

இனபாகுபாட்டால் பாதிப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு ஆகியவற்றை எதிர்நோக்கும் அமைப்புகளுக்கும் மேக்கன்சியின் நன்கொடை சென்று சேர்ந்திருக்கிறது.