Home One Line P2 ஜெப் பெசோஸ் : சொத்து மதிப்பு இப்போது 202 பில்லியன் டாலர்

ஜெப் பெசோஸ் : சொத்து மதிப்பு இப்போது 202 பில்லியன் டாலர்

803
0
SHARE
Ad

நியூயார்க் : இன்றைய நிலையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் முதல் இடத்தை வகிப்பவர் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ் (படம்). தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு பில்லியன் கணக்கில் உயர்ந்து வருவதாக வணிக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று புதன்கிழமையோடு அவரது அமேசோன் பங்குகளின் விலைகளின் மதிப்பைக் கொண்டு கணக்கிடும்போது அவரது சொத்து மதிப்பு தற்போது 202 பில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்துள்ளது. புளூம்பெர்க் வணிக ஊடகம் இந்தக் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அவரது சொத்து மதிப்பு மேலும் 87 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்புகளால் பல பன்னாட்டு நிறுவனங்களின் வணிகங்கள் தேக்கமடைந்திருக்கின்றன. வருமான இழப்புகளை சந்தித்து வருகின்றன.

ஆனால் முதலீட்டாளர்களோ தங்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆப்பிள், அமேசோன், அல்பாபெட் (கூகுள்), பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக, கொவிட்-19 பிரச்சனைகளுக்கிடையிலும் அமேசோன் பங்கு விலை சரிவுகளை எதிர்நோக்காமல் தொடர்ந்து வலிமையோடு இயங்கி வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமேசோன் பங்குகள் 86 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 25 விழுக்காடு விலை உயர்வை அமேசோன் பங்குகள் கண்டிருக்கின்றன.

ஜெப் பெசோஸ் – விவாகரத்து பெற்ற அவரது மனைவி மெக்கன்சி பெசோஸ்

1994-ஆம் ஆண்டில் அமேசோன் நிறுவனத்தை பெசோஸ் தோற்றுவித்தார். அந்நிறுவனத்தின் வளர்ச்சியின் துணையோடு 2017-ஆம் ஆண்டிலேயே உலகின் முதலாவது பணக்காரராக பெசோஸ் உயர்ந்தார்.

கடந்த மாதம்தான் பெசோசின் சொத்து மதிப்பு 172 பில்லியன் என மதிப்பிடப்பட்டது.

இப்போது ஒரே மாதத்தில் 202 பில்லியன் டாலராக மேலும் கூடுதலாக உயர்ந்துள்ளது.

தனது பணக்காரத் தனத்திற்கு ஏற்ப பெசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்த போதும் உலகிலேயே மிகப் பெரிய தொகை செலுத்தப்பட்ட விவாகரத்தாக அது அமைந்தது.