டெல் அவிவ் : கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசுவுடன் வரலாற்றுபூர்வ தூதரக உறவுகளை ஏற்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அபு தாபி நகரில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் சடங்கு நடைபெறவிருக்கிறது.
இந்த சடங்குக்கு செல்லவிருக்கும் பிரமுகர்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கின்றனர். அதற்கான குத்தகைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தனது நாட்டின் விமான நிறுவனங்களை இஸ்ரேலிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசு-இஸ்ரேல் இடையிலான அயலக உறவுகளை சீர்ப்படுத்த அமெரிக்க அரசாங்க ஏற்பாட்டில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அந்த பேச்சு வார்த்தைகளின் வெற்றியைத் தொடர்ந்து அபுதாபியில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவிருக்கிறது.
வணிக ரீதியான விமான சேவைகள் இதுவரையில் இஸ்ரேல் – ஐக்கிய அரபு சிற்றரசு இடையில் இல்லை. எல் அல் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் (El Al Israel Airlines) என்ற விமான நிறுவனமும் மற்றொரு சிறிய நிறுவனமான இஸ்ராய்ர் (Israir) விமான நிறுவனமும் இஸ்ரேலில் இயங்குகின்றன. இரண்டில் ஒரு நிறுவனம் திங்கட்கிழமை அபுதாபிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறும்.
வெள்ளை மாளிகையின் உயர்நிலை ஆலோசகர்கள் ஜேரட் குஷ்னர் (டிரம்பின் மருமகன்) அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரியன் போன்றவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ (உள்ளிட்ட இஸ்ரேலிய உயரதிகாரிகளுடன் இந்த முதல் விமானப்பயணத்தில் இடம் பெறுவர்.
இந்த விமானப் பயணம் குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் சவுதி அரேபியாவின் வான்வெளி மீது அந்த விமானம் பறந்து செல்ல வேண்டும். சவுதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லாத நிலையில் இதற்கான அனுமதியை சவுதி அரேபியா வழங்குமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த மே மாதத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுவில் இருந்து டெல் அவிவ் நகருக்கான முதல் விமானப் பயணத்தை எதிஹாட் விமான நிறுவனம் மேற்கொண்டது. கொவிட்-19 சூழ்நிலையில் பாலஸ்தீனர்களுக்கான கொவிட்-19 தொடர்பான பொருட்களை வழங்குவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.