கோலாலம்பூர்: நல்ல நிருவாகத் தலைமையை வெளிப்படுத்தும் மற்றும் சேவை தரத்தை தொடர்ந்து மேம்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
நிறுவன மேலாண்மை மற்றும் சேவை வழங்கல் நடைமுறைகளில், தொழிற்சங்கங்களிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக இந்த நட்சத்திரமதிப்பீட்டு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
“இந்த அங்கீகாரம் தொழிற்சங்கங்கள் சிறந்தவையாக இருப்பதற்கு ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தொழிலாளர் செறிவூட்டல் மற்றும் நிபுணத்துவம் (லீப்) கருத்தரங்கின் தொடக்கத்தில் கூறினார். அவரது உரையின் உரையை மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அமீர் உமார் வாசித்தார்.
மலேசியாவில் உள்ள தொழிற்சங்கங்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக, தொழிற்சங்கங்கள் அமைப்பின் (ஜெஎச்இகேஎஸ்- JHEKS) மூலம் மனிதவள அமைச்சு ‘தொழிற்சங்கங்களின் செயல்திறனுக்கான நடைமுறை நெறிமுறை’ புத்தகத்தை வெளியிட உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“பிற தொழிற்சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக பணியாற்ற ஒரு தொழிற்சங்கத்தின் மேலாண்மை மற்றும் நிருவாகத்தில் சிறந்த நடைமுறைகளின் உதாரணங்களை அடையாளம் காண்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்” என்று அவர் கூறினார்.