கோலாலம்பூர்: இந்து மதத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய மத போதகர் முகமட் சாம்ரி வினோத் காளிமுத்து மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மலேசிய இந்து ஆகம அணி அமைப்புக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூலை 5-ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்று நேற்று வியாழக்கிழமை அச்சங்கத்தின் ஆலோசகர் அருண் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
“முழுமையான விசாரணைக் கட்டுரையை பரிசீலித்தபின், இக்கடிதத்தை சமர்ப்பிக்குமாறு அரசு தரப்பு கோரியது. மற்ற எல்லா விவரங்கள் மற்றும் தகவலை அணுக எனக்கு அனுமதி இல்லை,” என்று அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலக வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி வாஸ்ரி அகமட் சுஜானி கூறினார்.
கடந்த வாரம், மலேசிய இந்து ஆகம அணி, சாம்ரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலத்திற்கு இரண்டாவது மனுவை சமர்ப்பித்தது.
கடந்த டிசம்பரில் கிளந்தானில் உள்ள ஒரு மசூதியில் இந்து மதத்தை அவமதித்ததாக கூறப்படும் உரையைத் தொடர்ந்து, டாக்டர் ஜாகிர் நாயக்கின் மாணவரான சாம்ரி மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று அவர்கள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தை வலியுறுத்தினர்.
கடந்த ஏப்ரல் மாதம், அவ்வுரைக் குறித்து சாம்ரிக்கு எதிராக காவல் துறையில் புகார் அறிக்கை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்லிஸில் சாம்ரி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஏமாற்றமடைந்த அருண் துரைசாமி, இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் அவமதித்ததாக இருந்தால் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் முடிவு வேறுபட்டிருக்கலாம் என்றார்.