கோலாலம்பூர்: அண்மையில் ராட்சசி படத்தினை அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிந்துரைத்த கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிற்கு தமது நன்றியை நடிகர் சூர்யா சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கம் மூலமாகத் தெரிவித்துக் கொண்டார்.
இதற்கிடையில், அப்படத்தில் முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள ஜோதிகா மற்றும் படக்குழுவினரும் அவரின் போற்றுதலுக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அறிக்கை ஒன்றின் மூலம் தங்களது நன்றியைத் தெரிவித்த அவர்கள், உலக அளவில் சிறப்பான கல்வி சூழலை ஏற்படுத்தும் படக்குழுவின் எண்ணம் பூர்த்தியானதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், ‘ராட்சசி‘ தமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக தமது முகநூல் பக்கத்தில் விவரித்திருந்தார்.
இலவச காலை உணவு திட்ட முன்முயற்சியை உள்ளடக்கிய தனது சிந்தனைகளை, இந்த திரைப்படம் விளக்கியுள்ளது என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவதைக் காண விரும்பும் தமது ஆசையையும் முன்வைக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த படம் ஒரு அசாதாரண கதை அம்சத்தைக் கொண்டிருப்பதாகவும், ஜோதிகா முக்கியமான கதாபாத்திரத்தை சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோல்வியடைந்த மாணவர்களின் பிரச்சனையை தீர்ப்பதில் காவல் துறை உட்பட அனைவரையும் ஈடுபடுத்துவதில் கீதா என்ற கதாபாத்திரம் வெற்றி பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கல்வியை அனைவரின் கூட்டுப் பார்வையாக மாற்றுவது மஸ்லீயின் மிகப்பெரிய அபிலாஷையாகும், ஏனெனில் கல்வி உள்ளூர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார்.