சென்னை: கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது..’ என்ற பாடலுக்கு பாடி நடித்த நடிகரும், இயக்குனருமான ராஜசேகர் உடல் நலக்கோளாறினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரை அடையாளம் காணும் விதமாக, அப்பாடல் அவருக்கு பெரும் மதிப்பாக இருந்தது.
இவரது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து ‘பாலைவனச் சோலை‘ ‘மனசுக்குள் மத்தாப்பூ‘, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு‘, ‘தூரம் அதிகமில்லை‘, ‘பறவைகள் பலவிதம்‘, ‘தூரத்துப் பச்சை‘, ‘கல்யாணக் காலம்‘ ஆகிய படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.
சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்து, அவை சார்ந்த சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தவிர்த்து 1985-ஆம் ஆண்டு ‘வந்தே மாதரம்’ எனும் தெலுங்கு திரைப்படத்தையும் ராஜசேகர் இயக்கியுள்ளார்.தமது 30 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பட வாழ்க்கையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் திடிரென காலமானது திரைப்பட இரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.