கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மீண்டும் விழி வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளதால் அவர் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வர இயலாது என்று அவரது வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் இருவரும் இன்று காலை 7.15 மணியளவில் அவரை அழைத்தனர் என்று அவர் கூறினார்.
“அவருக்கு விழி வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளது. நேற்றைய பயணத்தின் காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மேலும், நேற்று காற்றின் தூய்மைக்கேடு மோசமாக இருந்தது” என்று அவர் கூறினார்.
நஜிப் மருத்துவரைக் காணச் சென்று விட்டதாலும், அவரை மருத்துவர் காலை 10.30 மணிக்கு மட்டுமே கவனிப்பார் என்றும் ஷாபி கூறினார்.
பின்னர் அவர் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெராவிடம் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டார்.
“மலேசியா தினத்திற்காக நீதிமன்றம் அடுத்த திங்கட்கிழமை மூடப்படும். 1எம்டிபி விசாரணைகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே நடைபெறும். இரண்டு வெள்ளிக்கிழமைகளில் இழந்த நாட்களை மாற்ற முடியுமா” என்று செக்ரா நஜிப் மற்றும் அரசாங்க தரப்பினரை வினவினார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஷா அலாம் உயர்நீதிமன்றத்தில் கிரெடல் பண்ட் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரி கொலை வழக்கு விசாரணையில் நஜிப் ஈடுபடுவார் என்று ஷாபி சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தை நாளை வியாழக்கிழமை விவாதிப்பதற்கு முன்பு நஜிப்பின் மருத்துவ சான்றிதழுக்காக நீதிமன்றம் காத்திருக்கும் என்று கொலின் தெரிவித்தார்.
விழி வெண்படல அழற்சி காரணமாக 1எம்டிபி தொடர்பான விசாரணை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுகிறது.