ஜாகர்த்தா – 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரத்தனத்துடன் ஆட்சி செய்த இந்தோனிசிய அதிபர் சுகர்னோ வீழ்த்தப்பட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆட்சிக்கு வந்த அந்நாட்டின் முன்னாள் அதிபர் பி.ஜே.ஹபிபி இன்று புதன்கிழமை மாலை காலமானார்.
இந்தோனிசிய நேரப்படி மாலை 6.01 மணியளவில் அவர் காலமானார். ஹபிபியுடன் நெருக்கம் பாராட்டிய மலேசியத் தலைவர்களில் ஒருவரான பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் “எனது நெருக்கமான, நம்பிக்கைக்குரிய நண்பரும் இந்தோனிசியாவின் மூன்றாவது அதிபருமான ஹபிபி மறைந்தார் என்ற செய்தியறிந்து துக்கம் அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்,
“ஹபிபி எனது குடும்பத்தில் ஒருவர் போன்றவராவார். நான் சிறையிலிருந்து வெளியேறியவுடன் எனக்கு நடந்த அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து நான் அனுபவித்த வேதனைகள் குறித்து அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்” என அன்வார் தொடர்ந்து தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்,
2004-ஆம் ஆண்டு செப்டம்பரில் சிறையிலிருந்து வெளியேறியவுடன் முதுகுத் தண்டுவடத்திற்கான அறுவைச் சிகிச்சையை ஜெர்மனியின் மூனிக் நகரில் செய்து கொண்ட அன்வார் அந்த சமயத்தில் ஹபிபியின் இல்லத்தில்தான் தங்கியிருந்தார்.
அந்த சோதனையான காலகட்டத்தில் தனக்கு துணைக்கரம் நீட்டிய ஹபிபிக்கு அன்வார் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.