Home One Line P1 ஜாகிர் நாயக் : “சொன்னது சொன்னதுதான்” – காவல் துறையிடம் இராமசாமி, சதீஸ் முனியாண்டி உறுதி

ஜாகிர் நாயக் : “சொன்னது சொன்னதுதான்” – காவல் துறையிடம் இராமசாமி, சதீஸ் முனியாண்டி உறுதி

1354
0
SHARE
Ad

ஜோர்ஜ்டவுன் – தங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மதப் பரப்புரையாளர் ஜாகிர் நாயக் செய்திருந்த காவல் துறை புகார் தொடர்பில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சுமார் 4 மணி நேரம் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 11) காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். புக்கிட் அமான் தலைமையகத்தின் காவல்துறை அதிகாரிகள் பினாங்கிலுள்ள இராமசாமியின் அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

பின்னர் பாகான் டாலான் சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டியிடமும் சுமார் 3 மணி நேரம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணைகளின்போது காவல்துறைக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கியதாக இராமசாமி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.விசாரணைகளுக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இராமசாமியும் சதீசும், தங்களின் அறிக்கைகள் தொடர்பில் நாங்கள் சொன்னது சொன்னதுதான் என்றும் தாங்கள் கூறியதைத் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“இந்தியாவால் பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தேடப்படும் குற்றவாளியான ஜாகிர் நாயக்கை உள்நாட்டு அரசு அதிகார அமைப்புகள் பாதுகாத்து வருவதாக காவல் துறையிடம் தெரிவித்தேன்” எனவும் இராமசாமி பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

“ஜாகிர் குறித்து ஏன் உங்களைக் கருத்துகளைக் கூறினீர்கள் என என்னிடம் காவல் துறையினர் கேட்டனர். நானும் விளக்கமளித்தேன். ஜாகிர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவுக்குத் திரும்பி அவர் நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். ஜாகிர் நாயக் கேட்ட மன்னிப்பிலும் எந்தவித உண்மைத் தன்மை இல்லை என்பதையும் நான் காவல் துறைக்கு எடுத்துரைத்தேன்” என்றும் இராமசாமி கூறினார்.

பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சதீஸ் முனியாண்டியும் தனது கருத்துகளில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். ஜாகிர் நாயக் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் மலேசியாகினி மற்றும் மலேசியா இன்சைட் இணைய ஊடகங்களில் பதிப்பிக்கப்பட்டன.

“வேறொரு நாட்டிலிருந்து வந்து இந்த நாட்டின் நிரந்தர வசிப்பிடம் பெற்று தனது கருத்துகளால் மக்களிடையே மத, இனப் பிரச்சனைகளை இவர் எழுப்பி வருகிறார். நாம் அதிகம் போதிக்கும் சட்டப்படியான நீதிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு அவர் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் காவல் துறையிடம் நான் வலியுறுத்தியிருக்கிறேன்” என சதீஸ் முனியாண்டி தெரிவித்துள்ளார்.

அப்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதில் அரசாங்கத்திற்கு நெருக்குதல்கள், பிரச்சனைகள் ஏதும் இருந்தால், ஜாகிர் நாயக் பெருமையாகக் கூறிக் கொள்வதுபோல், அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் 13 நாடுகளில் ஒன்றுக்கு அவரை அரசாங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சதீஸ் முனியாண்டி வலியுறுத்தினார்.

தனது காவல் துறை புகாரில் ஜாகிர் நாயக் குறிப்பிட்டிருக்கும் ஐவரில் இராமசாமி, சதீஸ் தவிர்த்து மனித வள அமைச்சர் எம்.குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோரும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

அவர்களும் விசாரிக்கப்படுவர் என காவல்துறை அறிவித்திருக்கிறது.