கோலாலம்பூர் – மலேசியாவில் இயங்கிவரும் கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனை குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் இந்த விலை 5 பில்லியன் ரிங்கிட்டுக்கு நிகரானதாகும்.
டான்ஸ்ரீ குவெக் லெங் சான் தலைமையில் இயங்கும் ஹொங் லியோங் குழுமம், சொத்துகள் முதலீட்டு நிறுவனம் டிபிஜி (TPG) ஆகியவை இணைந்து மலேசியா, இந்தோனிசியா, வியட்னாம், உள்ளிட்ட தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளில் இயங்கும் கொலம்பியா ஆசியா குழுமத்தின் 17 மருத்துவமனைகள் மற்றும் ஒரு மருத்துவ மையம் (கிளினிக்) ஆகியவற்றை வாங்கியிருக்கிறது.
மலேசியாவில் 12 மருத்துவமனைகள், இந்தோனிசியாவில் 3 மருத்துவமனைகள், வியட்னாம் (2 மருத்துவனைகள் 1 மருத்துவ மையம்) என 17 மருத்துவமனைகளை ஹொங் லியோங் தலைமையிலான குழுமம் வாங்கியிருக்கிறது.
பல பெரிய நிறுவனங்கள் தற்போது உடல்நலம் சார்ந்த துறைகளில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்த கொலம்பியா ஆசியா விற்பனையாகும்.
இதற்கான உடன்படிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன.
கொலம்பியா ஆசியா இந்தியாவிலும் 11 மருத்துவமனைகளோடு இயங்கி வருகிறது. எனினும் ஹொங் லியோங் குழுமத்தின் உடன்படிக்கையில் இந்தியாவில் இயங்கும் கொலம்பியா ஆசியா மருத்துவமனைகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
கொலம்பியா ஆசியாவின் தலைமை நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது.