Home One Line P1 அம்னோ-பாஸ் இணைப்பு : அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா?

அம்னோ-பாஸ் இணைப்பு : அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா?

465
0
SHARE

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் அம்னோ-பாஸ் கட்சியினருக்கிடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, மலேசிய அரசியலில் ஒரு புதியதொரு மாற்றம் – புதிய கோணத்திலான ஓர் அரசியல் சிந்தனை விதைக்கப்பட்டிருக்கிறது.

மிகக் குறுகிய மனப்பான்மை கொண்ட இன – மத அரசியல் என்ற சாடல்கள் ஒருபுறம் எழுந்திருந்தாலும், அம்னோ, பாஸ் உறுப்பினர்களிடையே இந்த புதிய ஒப்பந்தத்தால் எழுச்சியும், உற்சாகமும் கரைபுரண்டோடுகின்றன என்பதை மறுக்க முடியாது.

கடலெனத் திரண்ட மக்கள் வெள்ளமும், மசீச, மஇகா போன்ற மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் பிளவுபடாத ஆதரவும் இந்த ஒப்பந்த விழாவுக்கு வலுவும், அர்த்தமும் சேர்த்துள்ளன.

ஆனால், பொதுத் தேர்தல் என்று வரும்போது இந்தக் கூட்டணி, மக்களின் அபிமானத்தை வெல்ல முடியுமா என்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

பாஸ்-அம்னோ இணைப்புக்குத் திரண்ட மக்கள்…

உதாரணமாக, முஸ்லீம் தயாரிப்புப் பொருட்களை மட்டும் வாங்குங்கள் என்ற பரப்புரையை பாஸ் மேற்கொண்டது, ஜாகிர் நாயக் விவகாரத்தில் அதன் நிலைப்பாடு போன்ற அணுகுமுறைகளால் மஇகா, மசீச போன்ற கட்சிகள் தர்ம சங்கட நிலைக்குத் தள்ளப்பட்டன.

இதுபோன்ற அணுகுமுறைகள் தொடர்ந்து கொண்டிருந்தால், இது இன, மத ரீதியான அரசியல் இணைப்பு அல்ல என்று பாஸ்-அம்னோ கூறிக் கொண்டிருப்பது மக்களிடையே எடுபடாது.

அம்னோ-பாஸ் இணைப்பு மாநாட்டில் மஇகா தலைவர்கள்

“அம்னோ, பாஸ் கட்சிகளின் ஒத்துழைப்பு நமது அன்பிற்குரிய நாட்டில் மற்ற மதங்களுடனோ, இனங்களுடனோ விரோதத்தை ஏற்படுத்தாது – பிளவுகள் ஏற்படுத்தாது” என நேற்றைய மாநாட்டில் உரையாற்றிய அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.

ஆனால், நாடு முழுமையிலும், இந்த ஒப்பந்தத்தால் முஸ்லீம் அல்லாத பொதுமக்களிடையே வெறுப்புணர்வும், எதிர்ப்பும் தோற்றுவிக்கப்பட்டிருப்பது என்பதையும் மறுக்க முடியாது.

இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும், இணக்கத்தையும் கொண்டு வந்த முதல் கூட்டணியான தேசிய முன்னணி இன்று தனது சித்தாந்தங்களிலிருந்து பாதை மாறி, அரசியல் வெற்றி என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றது.

அதற்கேற்ப, சரவாக் மாநிலத்தை ஆளும் கபோங்கான் பார்ட்டி சரவாக் என்ற கூட்டணி நாங்கள் தனித்தே இயங்குவோம் என அறிவித்துள்ளது. பாஸ் கட்சியுடனான இணைப்பால் சபா, சரவாக் மாநிலங்களில் அம்னோ-தேசிய முன்னணிக்கான செல்வாக்கு குறையும் என்றே கணிக்கப்படுகிறது.

மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் – ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன்

தீபகற்ப மலேசியாவில் பாஸ்-அம்னோ கூட்டணியால் கிடைக்கப் போகும் கூடுதல் ஆதரவு, கூடுதல் தொகுதிகள், சபா, சரவாக் மாநிலத்தில் இழக்கப்பட்டு, திரும்பவும் பழைய நிலைமைக்கே – அதாவது பொதுத் தேர்தலில் வெற்றியடைய முடியாமல் – அடுத்த அரசாங்கத்தை அமைக்க முடியாமல் – மீண்டும் அம்னோ-பாஸ் கட்சிகள் எதிர்க்கட்சிகளாகவே நீடிக்கும் அபாயமும் இருக்கிறது.

கால ஓட்டத்தில் மலேசிய அரசியலில் பல்வேறு அரசியல் மாற்றங்களையும், திருப்பங்களையும், எதிர்பாராத அதிர்ச்சிகளையும் இந்த இணைப்பு கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

அந்த மாற்றம் அடுத்த ஆட்சியை அமைப்பதில் முடியுமா – அல்லது பொதுமக்களின் எதிர்ப்பால் – 18 வயதுக்கும் மேற்பட்ட புதிய இளைய சமுதாய வாக்காளர்களின் ஆதரவில்லாமல் – அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் தோல்வியை பெற்றுத் தருமா – அல்லது சில மாநிலங்களை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சிகளாக அம்னோவும்- பாஸ் கட்சியும் செயல்படும் நிலைமைக்குத் தள்ளப்படுமா –

என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகளைக் காணும் காலம் இன்னும் கனியவில்லை!

-இரா.முத்தரசன்

 

Comments