ஈப்போ – நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) தொடங்கி 23 செப்டம்பர் 2019 வரையில் அரசுப் பணிகள் காரணமாக, உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அகமட் பைசால் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் நடத்தப்படும் சில முக்கிய கூட்டத் தொடர்களில் அகமட் பைசால் பங்கு பெறுவார். அக்கூட்டத் தொடரில் அமெரிக்க நாட்டுப் பாதுகாப்பு துறை, நீதித் துறை, கூட்டரசு புலனாய்வுத் துறை, மத்திய புலனாய்வுத் துறை மற்றும் தீவிரவாத துடைத்தொழிப்புத் துறைகளுடன் முக்கியமான அம்சங்கள் கலந்தாலோசிக்கப்படவுள்ளன.
அதிலும் குறிப்பாக பேராக் மாநில எல்லை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குறியீடுகள் குறித்து பேசப்படும் எனவும் தனது வருகை குறித்து மந்திரி பெசார் அகமட் பைசால் தெரிவித்தார். மேலும் அக்கூட்ட அமர்வில் பேராக் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ரசாருடின் ஹுசேனும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு, நிலையான சுரங்க முறைகளையும், கனிம வளங்களையும் தொழில்நுட்ப அணுகு முறைகளையும் கண்டறிய அமெரிக்க எரிசக்தி கனிமவள பணியகத்துடன் ஒரு சிறப்புச் சந்திப்பினையும் அகமட் பைசால் மேற்கொள்கிறார்.
அதோடு, நியூயார்க் நகரில் உள்ள காவல் ஆணையத்திற்கும் ஜோன் எப்.கென்னடி விமான நிலையத்திற்கும் சென்று பார்வையிட்டு அங்கே கடைப்பிடிக்கப்படும் பல பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் பேராக் மாநில மந்திரிபெசார் ஆலோசிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.