Home One Line P1 மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

மூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்!

1163
0
SHARE
Ad

கோலாலாம்பூர்: அண்மையில் பத்து ஆராங்கில் காவல் துறையினர்  நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிர் இழந்ததுடன், மோகனம்பாள் எனும் பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டது.

இது குறித்து கருத்துரைத்த பினாங்கு துணை முதல்வர், இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனிடையே, இது தொடர்பாக சுஹாகாம் தமது விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஜனார்த்தனம் விஜயரத்தினம், நவா செல்வன், மற்றும் மகேந்திரன் சந்திரகேகரன் ஆகிய மூவரை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தச் சொல்லியும் சுமார் ஏழு கிலோமீட்டருக்கு காரைத் துரத்தும் சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இவர்களில், இருவர், காவல் துறையினரை நோக்கிச் சுட்டதால், பதிலுக்கு காவல் துறையினரும் சுடும் நிலை ஏற்பட்டு, அந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.

ஜனார்த்தனின் மனைவி மோகனம்பாள் உடன் இருந்ததாகக் கூறப்படும் வேளையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனும் கூற்றினை காவல் துறையினர் மறுத்துள்ளனர். இதனால், சர்ச்சை ஏற்பட்டு, இக்குடும்பத்தின் வழக்கறிஞர் சிவாநந்தன் உண்மை நிலவரத்தை காவல் துறையினர் வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

உண்மையான சூழலை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டிய நிர்பந்தத்தில் காவல் துறை இருப்பதாக பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, காவல் துறைத் தலைவர் காவல் துறையினரின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றத்தைக் காண இயலும் என்று வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால், எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவர்கள் பயணம் செய்த காரில் மோகனம்பாள் இல்லை என்று காவல் துறை மறுத்து வரும் நிலையில், அவரின் நிலை பற்றிய கேள்விகளை அவரது குடும்பத்தினர் காவல் துறையினரை எதிர்த்து தொடுத்து வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் சிவாநந்தன் மனு ஒன்றினை தம்மிடம் சமர்ப்பித்ததாக சுஹாகாம் ஆணையர் ஜெரால்டு ஜோசப் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணையை நடத்தும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். மோகனம்பாள் குறித்து காவல் துறையினர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அதற்காக தொடர்ந்து காவல் துறையை சுஹாகாம் அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனார்த்தனும், காணாமல் போன மோகனம்பாள் என்பவரும் இங்கிலாந்தில் நிரந்தர குடியுரிமைப் பெற்றவர்கள். இங்கிலாந்தில் அவர்கள் வசதியுடன் வாழ்ந்து வருவதாகவும், விடுமுறைக்காக அவர்கள் மலேசியா வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.