புது டில்லி: இம்மாத தொடக்கத்தில் பிரதமர் மகாதீர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்யாவில் சந்தித்தபோது, சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க, இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை என்று டாக்டர் மகாதீர் கூறியதை இந்திய தரப்பு மறுத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி விளாடிவோஸ்டோக்கில் நரேந்திர மோடியுடன் மகாதீர் சந்தித்தபோது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஜாகிரை மலேசியாவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தியா கோரியுள்ளதாக அவர் கூறினார்.
“எங்களுக்கு அவர் தேவைப்படுகிறார். அதன் தொடர்பில் நாங்கள் அவரைப் பெறுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறோம்” என்று அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
விசாரணைக்காக இந்தியாவில் வேண்டப்படும் ஜாகிருக்கு, முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தால் மலேசியாவில் நிரந்தர குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டது.
ஜாகிர் சமீபத்தில் மலேசியாவிலுள்ள இந்தியர்கள் மற்றும் சீனர்களைப் பற்றிய தனது கருத்துக்கள் மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், காவல் துறை அவரை பொது சொற்பொழிவுகள் ஆற்றுவதிலிருந்து தடைசெய்துள்ளது.
முன்னதாக, வணிக வானொலி நிலையமான பிஎஃப்எம்–க்கு நேற்று செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், பிரதமர் மகாதீர், இந்தியப் பிரதமர் ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்புமாறு கோரவில்லை என்று தெரிவித்திருந்தார்.