ஜெட்டா: சவுதியில் உள்ள எண்ணெய் நிலையங்களின் மீது ஏவப்பட்ட ஆளில்லா குறு விமானங்களின் (ட்ரோன்) சிதறல்களை அந்நாடு ஆதாரமாக காட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் பங்கு இருப்பதை இது உறுதி செய்வதாக அது குறிப்பிட்டுள்ளது.
18 ஆளில்லா குறு விமானங்கள் மற்றும் ஏழு ஏவுகணைகள் ஏவப்பட்ட திசை அடிப்படையில் பார்க்கும் போது, ஏமனுக்கு இதில் தொடர்பில்லை என்று சவுதி தெரிவித்துள்ளது.
ஏமனில், ஈரானுக்கு ஆதரவளிக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பத்து ஆளில்லா குறு விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த ஈரான், எம்மாதிரியான இராணுவ நடவடிக்கையையும் சமாளிக்க அந்நாடு எதிர்தாக்குதல் நடத்த தயார் இருப்பதாக எச்சரித்துள்ளது.
எந்த இடத்தில் இருந்து இந்த ஆளில்லா குறு விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்ற தகவல்களை தர இயலாது என்று சவுதி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சவுதியின் இரண்டு முக்கிய எண்ணெய் நிலையங்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பொம்பியோ நேற்று புதன்கிழமை இளவரசர் முகமட் சல்மானை சந்தித்தார்.
இம்மாதிரியான தாக்குதல்கள் சவுதியின் பாதுகாப்பை அச்சுறுத்தியுள்ளதாகவும், மேலும் அந்நாட்டில் வாழும் மற்றும் பணிபுரியும் அமெரிக்க குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அதே நேரத்தில் உலகின் எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.