கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை ரவாங் பத்து ஆராங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, மூவர் பயணம் செய்த காரில் விஜயரத்தினத்தின் மனைவியான மோகனம்பாள் இல்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோகனம்பாள் என்ற பெண்மணி காணாமல் போயுள்ளதாக தங்களுக்கு புகார் பெறப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் நோர் அஸாம் ஜமாலுடின் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
ரவாங் வட்டாரத்தில் நடந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் இம்மூவருக்கும் பங்குண்டு என்று நோர் தெரிவித்தார். இதற்கிடையே, இராஜரத்தினம் கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதி மலேசியாவிற்குள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும், அவருடன் சுட்டுக் கொல்லப்பட்ட மகேந்திரன் மற்றும் தவசெல்வம் இருவரும் செந்தூல், ரவாங் வட்டாரங்களில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான குற்றப்பதிவு இருப்பதாகவும் அஸாம் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஜனார்த்தனம் விஜயரத்தினம், நவ செல்வன், மற்றும் மகேந்திரன் சந்திரகேகரன் ஆகிய மூவரும் சென்ற வாகனத்தை வாகனத்தை காவல் துறையினர் நிறுத்தச் சொல்லியும் சுமார் ஏழு கிலோமீட்டருக்கு காரைத் துரத்தும் சூழ்நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களில், இருவர், காவல் துறையினரை நோக்கிச் சுட்டதால், பதிலுக்கு காவல் துறையினரும் சுடும் நிலை ஏற்பட்டு, அந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.
மோகனம்பாள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையினரிடம் தெரிவிக்கும்படி நோர் தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணையம், சுஹாகாம் இந்த சம்பவம் தொடர்பாக தங்களின் விசாரணையைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.