Home One Line P2 திரைவிமர்சனம் : “காப்பான்” – நட்சத்திரங்களை நம்பி கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்!

திரைவிமர்சனம் : “காப்பான்” – நட்சத்திரங்களை நம்பி கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்!

1448
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடிகர் சூர்யாவின் திரைப்பட வரிசையில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த முக்கியமான படங்களில் ஒன்று அயன். அதன் இயக்குனர் கே.வி. ஆனந்துடன் மூன்றாவது முறையாக் சூர்யா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ’காப்பான்’.

இத்திரைப்படத்தில் சூர்யாவோடு, ஆர்யா, மோகன் லால், ஆயிஷா, சமுத்திரக்கனி என்று பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்க, லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு சூர்யாவும் கே.வி.ஆனந்தும் இணைந்த இரண்டாவது திரைப்படமான ’மாற்றான்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வந்தாலும் மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போழுது இத்திரைப்படத்திலாவது இவர்களின் கூட்டணி ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறதா? பார்ப்போம்?

கதை – திரைக்கதை

#TamilSchoolmychoice

முதல் காட்சியிலேயே ஓடும் இரயிலின் மீது பாய்ந்து, ஒரு வெடிகுண்டு வைத்து அந்த இரயிலைத் தகர்க்கிறார் சூர்யா. ஆங்கிலப் படத்திற்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த அதிரடிக் காட்சியோடு சில மாதங்களுக்கு முன்பு என்று திரைப்படம் துவங்குகிறது. சூர்யா தஞ்சாவூரில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

ஆனால் நிஜத்தில் இவர் இராணுவ அதிகாரி என்பதனால் நாட்டின் பாதுகாப்பிற்காக அடிக்கடி மேலிடம் தரும் வேலைகளையும் மறைமுகமாகச் செய்து முடிப்பவர். இவரது சேவையைப் பாராட்டும் இந்தியப் பிரதமர் (மோகன் லால்), தமக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின்(Special Protection Group) அதிகாரியாக சூர்யாவை நியமிக்கிறார். அதன் பிறகு பிரதமரின் உயிருக்கு தீவிரவாத கும்பலினால் ஒரு பிரச்சனை ஏற்பட, நாயகன் எப்படி அதை முறியடிக்கிறார் என்பதே இத்திரைப்படத்தின் மையக் கதை.

நடிகர்களின் நடிப்புத் திறன்

சூர்யாவின் நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லை. பாதுகாப்பு அதிகாரி வேடத்தில் மிடுக்கான உடல் மொழியுடன் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். ஆனால் நடுவில் மோகன் லாலே கிண்டல் செய்யும் அளவுக்கு எப்பொழுதும் சதா விறைப்பாகவே இருப்பதை சற்றுக் குறைத்திருக்கலாம்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஒரு ‘நல்ல’ இந்திய பிரதமராக வருகிறார். அவருடைய கதாபாத்திரமும் நேர்த்தியாகவே படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. முதல் பாதியில் ஏன் இந்தப் படத்தில் ஆர்யா என்கிற கேள்விக்கு இரண்டாம் பாதியில் இயக்குனர் பதில் அளித்திருக்கிறார். அவரும் தமக்கான வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். முதன் முறையாக ஒரு நேரடி தமிழ்படத்தில் இந்தி நடிகர் போமன் இரானி. அவருடைய நடிப்புக்கு பெரிய தீனி எதுவும் இல்லை என்றாலும் நல்ல அறிமுகம். மற்றபடி நாயகி ஆயிஷா, சமுத்திரக்கனி, பூர்ணா என்று அனைவரின் பாத்திரப்படைப்பிலும் அவ்வளவு வலு இல்லை.

பலம் மற்றும் பலவீனங்கள்

படத்தின் பெரும் பலம் பீட்டர் ஹெய்ன் மற்றும் திலீப் சுப்பராயன் அவர்களால் அமைக்கப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகள். எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை நன்றாகவே பதிவு செய்திருக்கிறது.

இத்திரைப்படத்தில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை இரண்டே முக்கால் மணி நேரத்தில் இந்திய நாட்டின் ஒட்டு மொத்தப் பிரச்சனைகளையும் சொல்லி விட வேண்டும் என்று இயக்குனர் முயற்சி செய்திருப்பதுதான். கார்பரேட் முதலாளிகள் எனப்படும் தொழில் அதிபர்கள் விவசாய நிலங்களை சுரண்டுவது, இந்திய எல்லையில் நடக்கும் இராணுவ அத்துமீறல்கள், சுயலாபத்திற்காக மக்களைக் காவு வாங்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், என்று அனைத்தையும் கதைக்குள் நுழைத்திருக்கிறார்கள்.

திரைக்கதை அமைப்பில் இயக்குனரோடு பல திகில், மர்மக் கதைகளின் படைப்பாளரான பிரபல தமிழ் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரும் இணைந்திருக்கிறார். இருப்பினும் கதையோட்டத்தில் திருப்பங்கள் எல்லாமே நாம் எளிதில் யூகிக்கும் வண்ணமே நகர்கிறது.

விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி எல்லா திரைப்படங்களிலும் ஒரு செய்தி – கருத்து சொல்வது வழக்கமாகிவிட்ட நிலையிலும், இதில் வில்லன் கோஷ்டி பயிர்களை நாசமாக்கப் போடும் ஒரு புதிய திட்டம் நம்மைப் படபடக்க வைக்கிறது. அனேகமாக படத்தில் இருக்கும் ஒரே ஒரு சுவாரசியமான விஷயமும் இதுவாகத்தான் இருக்கும்.

பொதுவாகவே இயக்குனர் கேவி ஆனந்த் ஓரளவுக்கு தரமான ஜனரஞ்சக திரைப்படங்கள் எடுப்பதில் வல்லுனர். ஆனால் இதில் ஏனோ சறுக்கல். பெரிய நட்சத்திரங்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் மட்டும் நம்பி, கதையில் கோட்டை விட்டிருக்கும் பிரம்மாண்ட திரைப்படங்கள் வரிசையில் காப்பானும் சேர்ந்திருக்கிறது.

ஒரு வேளை தீவிர சூர்யா ரசிகர்கள் மட்டும், செல்வராகவனின் “நந்த கோபால குமரனுக்கு (NGK)” காப்பான் எவ்வளவோ மேல் எனக் கொண்டாடலாம்.

-செல்லியல் விமர்சனக் குழு