கோலாலம்பூர்: கடந்த செப்டம்பர் 15 முதல் 21 வரை, புகை மூட்டம் காரணமாக ஆஸ்துமா மற்றும் விழி வெண்படல அழற்சி நோய்கள் நாடு முழுவதிலும் அதிகரித்துள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது அதிகமானது என்று சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
ஆஸ்துமா நோயாளிகள் 3.5 விழுக்காடாக அதிகரித்துள்ளனர். அதாவது 1,222 லிருந்து 1,265 ஆக அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் விழி வெண்படல் அழற்சி காரணமாக 403 நோயாளிகள் அடையாள காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக 266 நோயாளிகல் மட்டுமேசராசரியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
“இருப்பினும், சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் இதே காலகட்டத்தில் 9.6 விழுக்காடுகள் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன” என்று அவர் இன்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
33 புகை மூட்ட கண்காணிப்பு வசதியில் புகை மூட்டம் தொடர்பான நோய்களை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக அதிக ஆபத்தில் உள்ளவர்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, இதய நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
http://www.moh.gov.my/index.php/pages/view/183 எனும் அமைச்சின் அகப்பக்கத்தில் புகை மூட்டத்தினால் உடல்நல பாதிப்புகளைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.