நியூயார்க்: இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74-வது ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்ற மலேசியப் பிரதமர் துன் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) இங்கு வந்தடைந்தார்.
ஏற்கனவே பல உலகத் தலைவர்கள் குழுமியுள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐநா மன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற “ரோஹிங்யா அகதிகள்” மீதான கருத்தரங்கில் கலந்து கொண்டு மகாதீர் உரையாற்றினார்.
வங்காளதேசம், துருக்கி, சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து மலேசியா இந்த கருத்தரங்கை நடத்துகிறது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மகாதீர் ஐநா மன்றத்தில் உரையாற்றுவார்.
மேலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, பல உலகத் தலைவர்களையும் மகாதீர் சந்திப்பார்.
மகாதீருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.