Home One Line P1 பினாங்கு பாலம் விபத்து: வைத்தீஸ்வரன் நீதிமன்றத்தில் அமைதியுடன் காணப்பட்டார்!

பினாங்கு பாலம் விபத்து: வைத்தீஸ்வரன் நீதிமன்றத்தில் அமைதியுடன் காணப்பட்டார்!

703
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

ஜோர்ஜ் டவுன்: கடந்த ஜனவரி மாதம் பினாங்கு பாலத்தில் நடந்த விபத்தின் காரணமாக மஸ்டா சிஎக்ஸ்5 எஸ்யூவி ரக கார் கடலில் விழுந்த சம்பவத்தில், அக்காரைச் செலுத்திய மோய் கடலில் மூழ்கி மரணமுற்றார்.

அது தொடர்பாக மற்றொரு கார் ஓட்டுனரான வைத்தீஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டு, இன்று புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு சாட்சியான அப்துல் ராஷீட் முகமுட் எடுத்த 85 படங்கள் நீதிபதியிடம் காட்டப்பட்டன.

#TamilSchoolmychoice

விபத்து நடந்த உடனேயே ஜனவரி 20-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் 23 படங்கள் எடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ள 62 புகைப்படங்கள் வாகனத்தை தேடும் நடவடிக்கைக்கு முன்பும், பிறகும் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

21 வயதான வைத்தீஸ்வரனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எஸ்.பரமேஸ்வரன் கூறுகையில்,  ராஷீட் எடுத்த புகைப்படங்களில் மூன்று வாகனங்களின் சக்கர அடையாளத்தைக் காட்டுவதாகவும், ஒன்றுக்கொன்று இணையாக இல்லாமல் இருப்பதாகவும், அவை விபத்தில் சிக்கிய வாகனங்களுக்கு சொந்தமானவை அல்ல என்பதைக் குறிப்பிட்டுக் கூறினார்.

மூன்று சக்கர அடையாளங்களும் சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களுக்கு சொந்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை  என்பதை அப்துல் ராஷீட் ஒப்புக்கொண்டார்.

அடுத்த விசாரணை நவம்பர் 20 முதல் 21 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் நடத்த அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸால் பார்ஸ் அகமட் கைருடின் நிர்ணயித்தார்.

கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் பாலத்தின்  4-வது கிலோமீட்டர் தொலைவில் மோயின் காரை மோதி மரணத்தை ஏற்படுத்தியதற்காக வைத்தீஸ்வரன் மீது சாலை போக்குவரத்து சட்டம் 1987 கீழ் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், வைத்தீஸ்வரனுக்கு இரண்டு வருடங்களுக்கும் குறையாத மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையையும், 5,000 ரிங்கிட்டுக்கும் குறையாத, 20,000 ரிங்கிட் வரையிலும் அபராதம் அல்லது இரண்டையும் எதிர்கொள்வார். வழக்கு முடியும் வரை அவரது ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.