கோலாலம்பூர்: கடந்த நவம்பரில் சீ பீல்ட் கோயில் சம்பவத்தின் போது கலவரக் கட்டுப்பாட்டுக்கான நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) பின்பற்றப்பட்டதா என்பதை காவல் துறை தீர்மானிக்க உள்ளதாக காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.
“முறையான இயக்க நடைமுறை உள்ளது. அது பின்பற்றப்பட்டதா இல்லையா, அல்லது ஏன் பின்பற்றப்படவில்லை என்பதை நாங்கள் சரிபார்ப்போம். ஆனால், எஸ்ஓபி மாறாது, அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன்” என்று பெர்னாமாவிடம் அவர் இன்று வெள்ளிக்கிழமை மேற்கோளிட்டுள்ளார்.
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணத்திற்கு காவல் துறையின் செயலற்றதன்மை பங்களித்ததாகக் கூறிய மரண நீதிமன்ற நீதிபதியின் கூற்றுக்கு ஹாமிட் இவ்வாறு கருத்துரைத்தார்.
41 நாள் விசாரணையின் போது 30 சாட்சிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், முகமட் அடிப் அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று தாக்குதல்காரர்களால் தாக்கப்பட்டதாக நீதிபதி ரோபியா முகமட் தீர்ப்பளித்தார்.
இதற்கிடையில், அடிப் மரணம் தொடர்பான விசாரணையை காவல் துறையினர் மறு மதிப்பீடு செய்வார்கள் என்று ஹாமிட் கூறினார்.
“இதற்கு முன், எந்த ஆதாரமும் இல்லை என்பதால், நாங்கள் யாரையும் குற்றம் சுமத்த முடியவில்லை. ஆனால், குற்றவியல் கூறுகள் இருப்பதாக நீதிமன்றம் முடிவு செய்திருப்பதால், நாங்கள் அதை மீண்டும் மறு ஆய்வு செய்வோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
அடிப்பின் மரணத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் கண்டுபிடிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.