கோலாலம்பூர்: ஹாங்காங் ஒப்படைப்பு மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நேற்றிரவு இரவு கோலாலம்பூரில் உள்ள கம்போங் அத்தாப்பில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. “929 உலகளாவிய சர்வாதிகார எதிர்ப்பு” பேரணியில் 70 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது.
பேரணிக்கான இடம் ஆரம்பத்தில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன மன்ற மண்டபத்திற்கு (கேஎல்எஸ்சிஏஎச்) அருகிலுள்ள ஜாலான் பெல்ஃபீல்டில் ஒரு வெற்று இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும், நேற்றிரவு கேஎல்எஸ்சிஏஎச் நிருவாக இயக்குனர் லீ ஷோக் ஜிங் காவல் துறையில் அறிக்கையைப் பதிவு செய்த பின்னர், அந்த இடத்தை அருகிலுள்ள திறந்தவெளி கார் நிறுத்தும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பேரணிக்கு அவ்வமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
வண்ணமயமான லெனான் சுவர் (Lennon Wall) கொடியை அசைத்து, பேரணியின் ஏற்பாடு செய்தவரான லீவ் லியாங் ஹாங் (25) கூறுகையில், “காவல் துறையில் புகார் அறிக்கையை தாக்கல் செய்ய சீனா அரசாங்கம் கேஎல்எஸ்சிஏஎச் மீது தேவையற்ற அழுத்தத்தை சேர்த்தது. ஆகையால்தான், அது இடத்தை மாற்றும் சூழலுக்கு வித்திட்டது” என்று அவர் கூறினார்.
“ஒன்றுகூடுவதற்கான உரிமை அரசியலமைப்பில் பொதிந்துள்ளது. மேலும் காவல் துறையினரின் கடமை அமைதியான பேரணியை உறுதி செய்வதே தவிர, எங்களை கண்காணிப்பதில்லை. கேஎல்எஸ்சிஏஎச்–இன் தலைமை ஒரு வலுவான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள். ஹாங்காங்கில் பிரச்சனை அதன் மக்களுடன் மட்டுமல்ல. இது உலகளாவிய மனித உரிமை பிரச்சனை” என்று லீவ் கூறினார்.
மலேசியர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பேரணியில் சுமார் 15 காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.