ஜோர்ஜ் டவுன்: பினாங்கு பாயான் லெபாஸில் கட்டுபாடற்ற நிலையில் நடந்து கொண்ட ஒருவரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட அம்னோ புத்ரி பகுதி தலைவரான நூருல் அமால் முகமட் பாவ்சியிடமிருந்து காவல் துறையினர் இன்று திங்கட்கிழமை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
“கட்டுபாடற்ற நிலையில் நடந்து கொண்ட ஆடவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் அவரது அறிக்கையை நாங்கள் பதிவு செய்கிறோம். இது பினாங்கில் பதிவு செய்யப்பட்ட காவல் துறை புகார் அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை இரவு, கிளந்தான் குபாங் கெரியானில் நூருல் பேசிய போது, நபிகள் நாயகத்தை இரண்டு பாகிர்கள் அவமதித்ததால், அவர்களை சம்பந்தப்பட்ட நபர் கொன்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பும் பொறுப்பற்ற நபர்களை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் எச்சரித்துள்ளார். கடந்த திங்களன்று, 25 வயதான தொழிற்சாலை ஊழியரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். சம்பந்தப்பட்ட ஆடவர், 47 வயதான பெண் மேற்பார்வையாளரின் மரணத்தை ஏற்படுத்தியதோடு, 53 வயதான பாதுகாப்பு மேலாளரை காயப்படுத்தினார்.