ஜெட்டா: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி ஹாராம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றின் மீது 18 ஆளில்லாத குறுவிமானங்கள் மற்றும் ஏழு ஏவுகணைகளால் ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்காவும் சவுதியும் குற்றம் சாட்டியன.
ஈரான் நாட்டினால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய நிலையில், சவுதியும் அமெரிக்காவும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக கூறின. இந்த தாக்குதலுக்குப் பிறகு உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது.
மத்திய கிழக்கு பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கும் ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. ஆயினும், இக்குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.