கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் இறந்ததைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் உத்தரவுக்காக காவல் துறை காத்திருப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.
“நாங்கள் மரண நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்குகிறோம். மேலும், அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து மேலதிக அறிவுறுத்தல்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். விசாரணை ஒருபோதும் மூடப்படவில்லை, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இது தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்று மியோர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிலாங்கூரின் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மரியம்மன் கோயிலில் நடந்த கலவரத்தில் தீயணைப்பு வீரரான முகமட் அடிப் உயிரிழந்தார். இ ந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையில், அவர் இரண்டு அல்லது மூன்று அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார் என்று கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த முகமட் அடிப் கடந்தாண்டு டிசம்பர் 17-இல் கோலாலம்பூரில் உள்ள தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.