Home One Line P1 தேசிய முன்னணி: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த தலைமைச் செயலாளரா?

தேசிய முன்னணி: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த தலைமைச் செயலாளரா?

752
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணி கூட்டணியின் அடுத்த தலைமைச் செயலாளராக செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் (படம்) நியமிக்கப்பட அம்னோவில் ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன.

ஜோகூர் மாநிலத்தின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில், ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹிஷாமுடின் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்பது அந்தத் தொகுதியில் தேசிய முன்னணியின் வாய்ப்புகளை அதிகப்படுத்தி, அம்னோவின் தேர்தல் இயந்திரத்தையும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர் மாநில அம்னோவும் ஹிஷாமுடின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட ஒருமித்த ஆதரவை வழங்குவதாக ஜோகூர் அம்னோ தலைவர் ஹஸ்னி முகமட் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், பெர்லிஸ் மாநில அம்னோ தலைவரும் ஆராவ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஷஹிடான் காசிமும் ஹிஷாமுடின் தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட ஆதரவு தெரிவித்துள்ளார்.

2018 பொதுத் தேர்தல் வரை தெங்கு அட்னான் தேசிய முன்னணி தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். பொதுத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தெங்கு அட்னானுக்குப் பதிலாக முகமட் நஸ்ரி அப்துல் அசிசை அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி நியமித்தார்.

எனினும் அந்த நியமனத்திற்கு மஇகாவும், மசீசவும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மீண்டும் தெங்கு அட்னான் நியமிக்கப்பட்டார். தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அப்போது நஸ்ரி அசிஸ் பார்க்கப்பட்டார்.

தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் வழக்கு காரணமாக நீதிமன்றப் படிகளை அடிக்கடி ஏறிக் கொண்டிருக்கும் தெங்கு அட்னான், இப்போதுள்ள அரசியல் சூழலில் திறம்பட செயல்பட முடியாது என்ற எண்ணமும் தேசிய முன்னணி கட்சிகளிடையே வலுத்துள்ளது.

அம்னோவின் உதவித் தலைவராகப் பதவி வகித்த ஹிஷாமுடின் கடந்த ஆண்டு அம்னோ தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். தற்போது செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் தொடர்கிறார்.