Home One Line P2 பிக்பாஸ் 3 : இறுதிச் சுற்றில் 2 இலங்கைத் தமிழர்களைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டாரா?

பிக்பாஸ் 3 : இறுதிச் சுற்றில் 2 இலங்கைத் தமிழர்களைத் தவிர்க்கவே தர்ஷன் வெளியேற்றப்பட்டாரா?

736
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் – 3 நிகழ்ச்சி தொடங்கியது முதல் பல்வேறு முனைகளில் சர்ச்சைகளையே சந்தித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கும் நிலையில் கடைசி பங்கேற்பாளராக தர்ஷன் வெளியேற்றப்பட்ட முடிவு நெட்டிசன்கள் எனப்படும் இணையவாசிகள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் பலத்த கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

வழக்கமாக, இது இரசிகர்களின் முடிவு என கமல்ஹாசன், பிக்பாஸ் உட்பட ஸ்டார் விஜய் தரப்பில் சொல்லப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை எல்லாத் தரப்பிலும் கூறப்பட்டது என்னவென்றால், இறுதிச் சுற்றுக்கு வருவதற்கு தர்ஷன் எல்லா வகையிலும் தகுதியானவர் என்பதுதான்.

பிக்பாஸ் வீட்டின் நடப்புகளையும், பங்கேற்பாளர்களுக்கு வைக்கப்பட்ட போட்டிகளையும் பார்த்தால், ஷெரின், லோஸ்லியா, சாண்டி, ஆகியோரை விடவும் சிறப்பாகவும், அல்லது அவர்களுக்கு இணையாகவும் தனது திறன்களைக் காட்டியவர் தர்ஷன்.

#TamilSchoolmychoice

முகேன் நேரடியாக இறுதிச் சுற்றுக்குச் சென்றுவிட்டதால் அவரைத் தவிர அடுத்த நிலையில் சக பங்கேற்பாளர்களாலேயே இரண்டாவது இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டவர் தர்ஷன்.

அதனால்தான் அவர் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்ததும் மற்ற பங்கேற்பாளர்களே அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கமல் கூட “எனக்கும் ஏமாற்றம்தான்” எனத் தெரிவித்திருந்தார். “ஆனால் என்ன செய்வது அவர்கள் முடிவு செய்தது” என்றும் கமல் மக்களைப் பார்த்துக் கூறினார்.

ஆனால், தர்ஷன் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியே வந்து மேடையில் தோன்றியதும் மக்களிடையே கிடைத்த வரவேற்பு வேறு விதமாக இருந்தது. அவ்வளவு வரவேற்பு தர்ஷனுக்கு!

ஆரம்பம் முதலே ஒவ்வொரு பங்கேற்பாளரும் வெளியேற்றப்படும்போது மக்கள் தீர்ப்பு என்று கூறப்பட்டாலும், பொதுமக்கள் வாக்களிப்புகள் முறையான அங்கீகரிக்கப்பட்ட கணக்குத் தணிக்கை ஒன்றினால் தணிக்கை செய்யப்படுகிறதா என்பது போன்ற விவரங்கள் ஸ்டார் விஜய் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒவ்வொரு பங்கேற்பாளரும் வெளியேற்றப்பட்ட தருணத்தில் சில சர்ச்சைகளும் எழுந்தன. ஸ்டார் விஜய் நிர்வாகம் சொந்த, வணிகக் காரணங்களுக்காக பங்கேற்பாளர்களை வெளியேற்றும் முடிவுகளை எடுக்கிறது என்ற குறைகூறல்களும் எழுந்தன.

அந்த வகையில் பார்த்தால், இறுதிச் சுற்றில் லோஸ்லியா, தர்ஷன் இருவரையும் தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்தில் வைத்திருந்தால் இரண்டு இலங்கைத் தமிழர்கள் இறுதிச் சுற்றில் இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கும். இதன் காரணமாக, யார் வெற்றியாளர் என்ற வாக்களிப்பு வரும்போது உலகம் எங்கும் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் வாக்குகள் இருவருக்குமே பிரிந்த நிலையில் சென்றிருக்கும்.

அத்தகைய சூழலைத் தவிர்க்கும் விதமாகவே, லோஸ்லியா, தர்ஷன் இருவரில் ஒருவரை மட்டும் வைத்துக் கொள்ளும் முடிவை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துநர்கள் முடிவு செய்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது.

தர்ஷனை வெளியேற்றியதால் இப்போது ஓர் இலங்கைத் தமிழர் (லோஸ்லியா), ஒரு மலேசியர் (முகேன்), சாண்டி, ஷெரின் என இரண்டு தமிழகத்தினர் என பொதுமக்கள் வாக்களிப்பு நடைபெறும்.

மொத்தத்தில் இறுதிச் சுற்றில் இரண்டு இலங்கைத் தமிழர்கள் இருப்பதைத் தவிர்க்கவே, எவ்வளவோ சிறப்பாகச் செயல்பட்டும் தர்ஷன் வெளியேற்றப்பட வேண்டிய பரிதாப நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

-செல்லியல் விமர்சனக் குழு