சென்னை – 2016-ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டதாக, தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட அப்பாவு தொடுத்திருந்த நீதிமன்ற வழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, தமிழக அரசியலில் மேலும் சில சுவாரசியங்களை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க வேட்பாளராக இன்பதுரை இங்கு போட்டியிட்டு 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 69,590 வாக்குகளும் அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் தபால் ஓட்டுகளில் பல ஓட்டுகளைச் செல்லாது எனத் தேர்தல் அலுவலர்கள் அறிவித்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து 203 தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான வாக்கு இயந்திரங்களை எதிர்வரும் அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் ஒப்படைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த மறுவாக்கு எண்ணிக்கை அப்பாவுக்கு சாதகமாக அமைந்தால் அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அல்லது இராதாபுரம் தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது.
எனினும், இன்றைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தடையுத்தரவு கோரியும் மனு செய்துள்ளார்.
அந்த மேல்முறையீட்டின் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ளது.