Home One Line P2 திரைவிமர்சனம்: “நம்ம வீட்டுப் பிள்ளை” – தொய்வான திரைக்கதையை நட்சத்திரப் பட்டாளமும் நகைச்சுவையும் காப்பாற்றுகிறது

திரைவிமர்சனம்: “நம்ம வீட்டுப் பிள்ளை” – தொய்வான திரைக்கதையை நட்சத்திரப் பட்டாளமும் நகைச்சுவையும் காப்பாற்றுகிறது

874
0
SHARE
Ad

கோலாலம்பூர் – குடும்ப உறவுகளின் சிக்கல்களை கிராமத்துப் பின்னணியில் சொன்ன அதே “கடைக்குட்டி சிங்கம்” அமைப்பில் இயக்குநர் பாண்டிராஜ், இன்னொரு கோணத்தில் சிவகார்த்திகேயனை வைத்தும், இன்னும் சில இருபது முப்பது சொச்ச கதாபாத்திரங்களை வைத்தும் சொல்லியிருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.

“மெரினா” என்ற படத்தின் வழி முதன் முதலாக சிவகார்த்திகேயனை  கதாநாயகனாக்கியவர் என்ற பெருமை பாண்டிராஜூக்கு உண்டு.

ஆபாசம் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கும் விதத்தில் படம் எடுத்திருப்பதற்கு இயக்குநருக்குப் பாராட்டு சொல்லலாம். ஆனால், அவர் சொல்ல வந்த கருத்தையும், கதையையும் சித்தரிக்க இத்தனை கதாபாத்திரங்கள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

#TamilSchoolmychoice

ஓரிரண்டு குடும்பங்கள், ஓரிரண்டு குடும்ப உறவுகளை வைத்தே அற்புதமான பல தமிழ்ப் படங்கள் வந்திருக்கின்றன – வெற்றியும் பெற்றிருக்கின்றன.

யார் யாருக்கு மாமா, யார் சித்தப்பா, என்ற குழப்பமெல்லாம் நாம் தெரிந்து கொண்டு தீர்க்கும் போது பாதிப் படம் முடிந்து விடுகிறது.

தொய்வான திரைக்கதை

படத்தின் முதல் பாதிவரை வெறும் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள், அவர்களுக்கிடையிலான சம்பவங்கள் என படம் நகர்கின்றது. எந்தவித சுவாரசியமும் இல்லை. வழக்கம்போல் அரும்பொன் என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் வீட்டுக்கு நல்ல பிள்ளையாக, தந்தையில்லாத வீட்டில் தங்கையையும், தாயாரையும் நன்கு பார்த்துக் கொள்ளும் பிள்ளையாக வருகிறார்.

ஆனால், சண்டை என்று வந்துவிட்டால் வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகனைப் போல் இருபது முப்பது பேர்களை வரிசையாக அடித்து வீழ்த்துகிறார்.

இடைவேளைக்குப் பின்னர் சிவகார்த்திகேயனின் தங்கை துளசியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் பிறப்பு குறித்த பின்னணி சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் அப்பாவாக வரும் சமுத்திரகனியின் கடந்த காலக் கதை கொஞ்சம் சொல்லப்பட்டு, பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் நட்டியை (நடராஜ்) திருமணம் செய்து கொள்ள அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மோதல்களையும் காட்டிவிட்டு, படத்தை சுபமாக முடித்திருக்கின்றனர்.

பிரம்மாண்டத்திற்காக இத்தனை நட்சத்திரப் பட்டாளம் என்று வைத்துக் கொண்டாலும், சொல்ல வந்த கதைக்கும் கருத்துக்கும் தேவைக்கும் அதிகமான கதாபாத்திரங்கள். பல இடங்களில் சம்பவங்கள் மூலமே படம் நகர்கிறது. வலுவில்லாத கதையை சம்பவங்களால் கொண்டு செல்ல இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

படத்தின் திருப்பங்கள் அனைத்தும் எதிர்பாத்த மாதிரியே நடப்பது இன்னொரு பின்னடைவு. நட்டியை ஆரம்பம் முதல் வில்லனாகக் காட்டிவிட்டு, அவர் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்கிறார் என்றதுமே என்ன நடக்கப் போகிறது என்பது நமக்குத் தெரிந்து விடுகிறது. அதே போன்று நடக்கவும் செய்கிறது. நட்டி மீண்டும் சிவகார்த்திகேயனைத் தேடி தனது பிரச்சனைக்காக வருவார் என்பதையும் ஊகிக்க முடிகிறது. அதுவும் நடக்கிறது.

இதனால், படத்தின் விறுவிறுப்பும், வேகமும் குறைந்து பல இடங்களில் சுவாரசியம் குறைந்து போரடிக்கிறது.

படத்தின் பலம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பிரம்மாண்டம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அப்பட்டமாகத் தெரிகிறது.

கிராமத்துப் பின்னணியை அழகான ஒளிப்பதிவால் கண்களுக்கு குளிர்ச்சியாக்கியிருக்கிறார் அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

படத்தின் இன்னொரு பலம் இசை. டி.இமானின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி இருக்கின்றன. ‘மயிலாஞ்சி’ திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் காதில் ரீங்காரமிடுகிறது.

படத்தைக் காப்பாற்றும் நட்சத்திரப் பட்டாளம் – கலகலப்பான வசனங்கள்

படத்தில் சில குறைகள் இருந்தாலும், படத்தை இரசிக்க வைப்பது – ஓரளவுக்குக் காப்பாற்றியிருப்பது இரண்டு அம்சங்கள். நல்ல நடிப்புத் திறன் கொண்ட நட்சத்திரப் பட்டாளம் – திரையரங்கையே கலகலக்க வைக்கும் நகைச்சுவை வசனங்கள்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் போல் இறுதி வரை வந்து நம்மைக் கவர்பவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. 80 வயது நாட்டு வைத்தியராக இறுதி வரை மகன்களுக்காக உழைக்கும் கதாபாத்திரமாக உருக வைக்கிறார். படம் முழுக்க அமைதியாக பேசும் பாரதிராஜா குமுற வேண்டிய இடத்திலும், குரலை உயர்த்த வேண்டிய இடத்திலும் அதற்கேற்ப தனது நடிப்பை வழங்கி  கைத்தட்டல்களைப் பெறுகிறார்.

கொஞ்ச நேரமே வந்தாலும் திரையை ஆக்கிரமித்திருக்கிறார் சமுத்திரகனி. அவருடன் நண்பனாக வரும் ஆர்.கே.சுரேஷ் அதிக வசனம் இல்லையென்றாலும் உடல்மொழியால் கவர்கிறார்.

நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. சிவகார்த்திகேயனுடன் வரும் சூரியும் அவரது மகனாக வரும் பையனும் அடிக்கும் லூட்டிகள் திரையரங்கை சிரிப்புகளால் நிறைக்கிறது. சூரியாக வரும் பையன் இயக்குநர் பாண்டிராஜின் மகன் என்பது கூடுதல் தகவல்.

இன்னொரு புறத்தில் சிவகார்த்திகேயனுடன் சேராமல் வில்லன்களுடனேயே சேர்ந்து வழக்கறிஞராக ஆலோசனைகளைத் தந்து களை கட்ட வைக்கிறார் யோகிபாபு.

பிரசவத்திற்காக அண்ணன் மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் காரில் சிவகார்த்திகேயனும் சூரியும் பேசும் பேச்சுகளும், பிரசவ வலியுடன் அந்தப் பெண் விடும் விளாசல்களும் குபீர் சிரிப்பு இரகம்.

கதாநாயகி மாங்கனியாக வரும் அனு இமானுவேல் அழகுப் பதுமையாக வந்து சிவகார்த்திகேயனுடன் கொஞ்சிக் கொஞ்சிக் காதல் பேசுகிறார், இரண்டு பாடல்களில் இணைகிறார் அவ்வளவுதான்.

பாரதிராஜாவை அடிக்கடி குரல் மிமிக்ரி செய்தும் சிவகார்த்திகேயன் சிரிப்பலைகளைப் பரப்புகிறார். அடிக்கடி சூரியிடம் குடிப்பதற்கு பணம் கேட்கும் மாமனார், சிவகார்த்திகேயன் காதல் வசனத்தை இருமிக் கெடுக்கும் கதாநாயகியின் அப்பா சண்முகராஜன், சிரிப்புப் போலீசாக வரும் கதாபாத்திரம் என பல சின்னச் சின்னக் கதாபாத்திரங்களை வைத்து நகைச்சுவைத் தோரணம் கட்டியிருக்கிறார் பாண்டிராஜ்.

இப்படியாக, படம் முழுக்க வரும் நகைச்சுவைப் பகுதிகளும், நட்சத்திரங்களின் சிறப்பான நடிப்பும்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

அதற்காகவே, ஒருமுறை படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்!

– இரா.முத்தரசன்