கோலாலம்பூர்: நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கட்சித் தாவுதல் நடவடிக்கை முழுக்க முழுக்க தனிநபர் சம்பந்தப்பட்டது என்றும், அது ஒரு நல்ல காரணத்திற்காக இருக்க வேண்டும் என்றும் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
அரசாங்கத்துக்கோ அல்லது அவர்களின் தற்போதைய கட்சிக்கோ பங்களிக்க முடியாது என்று அவர்கள் நம்பினால் கட்சித் தாவுதல் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று பிரதமர் கூறினார்.
“மிகவும் மோசமான ஓர் அரசாங்கத்தை எதிர்கொள்ளும் போது, நீங்கள் அதனை விட்டு வெளியேறவும் முடியாமல், இன்னும் அந்த அரசாங்கத்துடன் இருக்க நினைத்தால், அது நல்லாட்சிக்கு பங்களிக்கப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறினார்.
கட்சி தாவுதலுக்கு எதிராக சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா என்று டாக்டர் மகாதீரிடம் கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
வேறொரு கட்சிக்கு வர நினைப்பவரகள் தனிப்பட்ட அபிலாஷைகள் காரணமாக வருவது ஏற்கத்தக்கதல்ல என்று பிரதமர் கூறினார்.
“நீங்கள் பிரதமருடன் நெருக்கமாக இருந்தால் நீங்கள் ஓர் அமைச்சராவீர்கள் என்று நீங்கள் நினைத்தால், அது மோசமான எண்ணமாக தோன்றுகிறது,” என்று அவர் கூறினார்.