Home One Line P1 சிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு

சிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு

1573
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 21-ஆம் தேதி மாலையில் தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில், பன்னாட்டு மொழி வளாகத்தில் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி (படம்) எழுதிய “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” என்ற நூலின் வெளியீட்டு விழா வித்தியாசமான முறையிலும், சிறப்பான வகையிலும் நடந்தேறியது.

முதல் கட்டமாக, மலேசியாவில் வழக்கமாக சிறுகதை, கவிதை, நாவல் என வெளியிடப்படும் நூல்களுக்கு மத்தியில் தனது ஆசிரியர் பணி குறித்த சுவாரசியமான அனுபவங்களை இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் இராஜகோபால்.

முனைவர் ரஹிம் நூலாய்வு உரை நிகழ்த்துகிறார்

இதுபோன்ற அனுபவங்களின் தொகுப்பு எதிர்காலத்தில் தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கல்வி குறித்த ஆராய்ச்சிகளுக்கும், கடந்த காலங்களில் இந்தியர்களின் கல்வி நிலைமையையும், கல்விப் பிரச்சனைகளையும், சமூக சூழல்களையும் அறிந்து கொள்வதற்கும் பெரிதும் உதவும்.

#TamilSchoolmychoice

இரண்டாவதாக, இந்த நூலை தான் விரிவுரையாளராகப் பணியாற்றிய அதே லெம்பா பந்தாய் கல்லூரி வளாகத்தில் நடத்தினார் இராஜகோபால். தான் பணியாற்றிய கல்வி வளாகத்திலேயே தனது நூல் வெளியீட்டு விழாவையும் நடத்தி சிறப்பு சேர்த்தார் அவர்.

காதர் இப்ராகிமின் எழுச்சியுரை

அடுத்து, இந்த நூல்வெளியீட்டுக்குத் திரண்ட கூட்டம். வழக்கமான தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் போல் அல்லாமல் ஏறத்தாழ 500 பேர் இந்த நூல் வெளியீட்டு விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நூலாசிரியர் இராஜகோபாலின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களோடு, அவரது சக ஆசிரியர்கள், அவரது பூர்வீக நகரான கோலசிலாங்கூர் வட்டார மக்கள், அவரது மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் திரண்டதால்தான் நூல் வெளியீட்டுக்கு இத்தனை பேர் கொண்ட கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

தனது பூர்வீக நகரான கோலசிலாங்கூர் வட்டாரத் தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்களின் கலைத் திறனைக் காட்டும் படைப்புகளையும் மேடையில் அரங்கேற்றியது நிகழ்ச்சியின் இன்னொரு வித்தியாச சிறப்பு.

நூலாசிரியருக்கும் அவரது துணைவியார் சரஸ்வதிக்கும் சிறப்பு செய்யப்படுகிறது

நமது நாட்டில் கல்விப் பணியில் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க பணிகளையும், பங்கையும் ஆற்றியிருந்தாலும் அதுகுறித்த அனுபவங்களை அவர்கள் நூலாக எழுதி வெளியிடுவது மிகவும் அபூர்வமாக நிகழ்கிறது. அந்த வகையில் சாதாரணக் குடும்பப் பின்னணியில் பிறந்து பின்னர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, தேர்வுகளில் சில தடவைகள் தோல்வியடைந்தாலும் இடைவிடாது கடும் முயற்சியோடு பல்கலைக் கழகப் பட்டப் படிப்புகளையும் முடித்து, முனைவர் பட்டத்தையும் பெற்ற இராஜகோபால் பொன்னுசாமி சுவாரசியமான தனது ஆசிரியர் பணி அனுபவங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் நூல்தான் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்”.

தொழிலதிபர் டத்தோஸ்ரீ டாக்டர் சூசை மைக்கல் இந்த நூல் வெளியீட்டுக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார்.

டாக்டர் ரஹிம் கமாலுடின் இந்த நூல் குறித்த நூலாய்வை வழங்கி உரை நிகழ்த்தியதோடு, பல்வேறு கல்வி, சமூகப் பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மனோவியல் பயிற்றுநர் டாக்டர் காதர் இப்ராகிமின் எழுச்சியுரையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முக்கிய அங்கமாக இடம் பெற்றது.

நூல் குறித்த மேல்விவரங்களுக்கு :

நூலாசிரியர் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி

கைத்தொலைபேசி எண்: +6012-9307150