கோலாலம்பூர்: அரசியல் தலைவர்கள் வறுமையில் இருப்பவர்களின் பிரச்சனையில் கவனம் செலுத்துவதன் மூலம் நாட்டில் இனம் மற்றும் மதம் தொடர்பான தலைப்புகளிலிருந்து விடுபட வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
தீவிர மதவாதிகள் உருவாக்கிய கருத்துகளை திசை திருப்புவதில் கல்வியாளர்களும் தொழில் வல்லுநர்களும் பங்கு வகிக்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
“வறுமை மற்றும் சமத்துவமின்மை குறித்த விவகாரத்தில் நம் கவனம் இருக்க வேண்டும். இன மற்றும் தீவிர மதவாதிகளால் தூண்டப்பட்ட இன மற்றும் மதப் பிரச்சனைகளிலிருந்து இந்த விவரணையைத் திரும்பப் பெறுவதில் நாம் குறியாக இருக்க வேண்டும்” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை கூறினார்.
தாம் பிரதமராக பதவியை வகிக்கும் போது, இன பாகுபாடுகளைப் பொருட்படுத்தாமல் வறுமையில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்துவதை உறுதி செய்ய உள்ளதாகக் கூறினார்.
நலத்திட்டத்திற்கு மேலதிகமாக, மதங்களுக்கிடையில் உரையாடலுக்கான ஒரு திட்டத்தையும் கொண்டு வர அவர் எண்ணம் கொண்டுள்ளார்.
“அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களும் இந்த புதிய பாதையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
அன்வார் நாட்டின் நிருவாகத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடமிருந்து ஏற்றுக்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், அது குறித்த தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும், இந்த மாற்றமானது நடக்குமா இல்லையா என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.