கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து வெளியேறிய பணத்தை மீட்க 80 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அபராதத் தொகை வெளியிடப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் சிஐஎம்பி குழுமத் தலைவர் நசீர் ரசாக், பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் மற்றும் முன்னாள் பெல்டா தலைவர் ஷாகிர் சாமாட் ஆகியோர் பட்டியலின் படி, தொகை பற்றிய அறிவிப்பைப் பெற்றவர்களில் அடங்குவர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயாவின் கூற்றின்படி, 430 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகை அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு வாரங்களுக்குள் அதனை செலுத்த வேண்டும் என்றார்.
பிரிவு 92-இன் கீழ் இந்த நடவடிக்கை விசாரிக்கப்படும் நிலையில்,குறிப்பிட்டத் தொகையை செலுத்தத் தவறினால் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்.
“சம்பந்தப்பட்ட பணம் அனைத்தும் மக்களுக்கு சொந்தமானது. மேலும் எம்ஏசிசி முடிந்தவரை அவற்றை மீட்டெடுக்கும். சம்பந்தப்பட்ட பணம் காசோலை செலுத்துதல்கள் மூலம் வெளியாகி உள்ளது,” என்று அவர் கூறினார்.